மகசேசே தமிழன்!

மகசேசே தமிழன்!

08-Aug-2012

Source: Weekly Magazine – Ananda Vikatan , 08-08-2012,

எஸ்.ராஜாசெல்லம்படங்கள் : எம்.தமிழ்ச்செல்வன்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்பு லட்சுமி, சமூகப் பணியாளர் அருணா ராய், புற்று நோய் சிறப்பு மருத்துவர் சாந்தா, பத்திரிகையாளர் பி.சாய்நாத்… இவர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் குழந்தை ஃபிரான்சிஸ்.

ஆசியாவின் நோபல் பரிசு என்ற அங்கீகாரமும் பெருமையும்கொண்ட ‘ராமன் மகசேசே விருது’ வென்ற தமிழர்களின் வரிசை அது!

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குழந்தை ஃபிரான்சிஸ், கடந்த 35 ஆண்டுகளாக, பின்தங்கியவர்களின் சமூக மேம்பாட்டுக் காக சேவை ஆற்றியதற்காகவே இந்தஅங்கீ காரம். ‘ஒருங்கிணைந்த கிராம முன்னேற்றத் திட்டம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் மகளிரின் பொருளாதாரத் தன்னிறைவு தொடங்கி பெண் சிசுக் கொலை தடுப்பு, அடிப்படைச் சுகாதாரம் எனப் பல தளங்களில் களப்பணி ஆற்றி வருகிறார்.

”என்னோட பிறந்தவங்க அஞ்சு பேர். என் அப்பாவின் ரயில்வே கேங்மேன் வேலை எங்களோட உணவு, உடை, படிப்புச் செலவுகளைச் சமாளிக்கக்கூடப் போதலை. அண்ணன், அக்கா எல்லாம் பள்ளிப் படிப் பையே முடிக்காம வேலைக்குப் போயிட் டாங்க. பிள்ளைங்கள்ல ஒருத்தரையாவது காலேஜ் வரை படிக்கவைக்கணும்னு என் அம்மா அந்தக் கஷ்ட காலத்துல விடாப் பிடியாப் போராடினதுக்குக் கிடைச்ச பரிசு தான் இந்த விருது!” – மனநிறைவாகப் பேசத் தொடங்கினார் குழந்தை ஃப்ரான்சிஸ்.

”குடும்பத்தின் வறுமையைப் போக்க வேலைக் குப் போகும் நிர்பந்தம் தாண்டி, சேவைப் பக்கம் மனம் திரும்பியது எப்படி?”

”சின்ன வயசு வறுமைதான் காரணம். அறியாமை காரணமா எங்க குடும்பம் பட்ட கஷ்டத்தை மத்த குடும்பங்க அனுபவிக்கக் கூடாதுனு தோணுச்சு. கல்லூரிப் படிப்பை முடிச்சதும் ஏழை எளியவர்களுக்கு சேவை செய்யணும்னு பாதிரியார் ஆக முடிவு எடுத்தேன். அதற்கான பயிற்சியின்போது பங்களாதேஷ் போரில் பாதிக்கப்பட்ட அகதிகளுக்குச் சேவை செய்ய கொல்கத்தா போனேன். புனே வறட்சி பாதிப்புப் பகுதிகளில் பணியாற்றினேன். அந்தக் களப் பணிகள் எனக்கு ஒரு விஷயத்தைப் புரியவைத்தன. வறுமையில் வாடும் மக்கள் யாரும் சோம்பல் காரணமாகவோ, ஆசைப் பட்டோ அந்த நிலையில் இல்லை. அவங்க அறியாமை காரணமாகவே அப்படி இருக் காங்க. இத்தனைக்கும் நாம் அசந்துபோகும் அளவுக்கு அவங்க உழைக்கிறாங்க. ஆனா, சரியான வழிகாட்டல் இல்லாததால், அது எல்லாமே விழலுக்கு இறைத்த நீராப் போயிடுது. நான் அவங்களுக்கு வழி காட்டியா இருக்க ஆசைப்பட்டேன்!”

”35 ஆண்டு காலப் பணியின் இயல்பு என்ன?”

”தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில்தான் முதலில் என் வேலைகள் ஆரம்பித்தன. பாதிரியார் பயிற்சியை விட்டுட்டு, ‘ஒருங்கிணைந்த கிராம முன்னேற்றத் திட்டம்’ மூலமா மக்களிடையே என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். முதல் வேலையா அந்தப் பகுதி மக்களுக்காக இரவுப் பள்ளி நடத்தினேன். அந்தப் பகுதியில் நல்லா மழை பெய்தா லும், மலைப் பிரதேசம் என்பதால் மொத்த நீரும் வழிஞ்சு ஓடிப்போயிரும். விவசாய நிலமெல்லாம் வானம் பார்த்த பூமிதான். பெல்ஜியம் நாட்டு அமைப்பின் நிதி உதவி யோடு சேசுராஜபுரம், அஞ்செட்டி, தக்கட்டி, கோட்டையூர், உரிகம், நாட்றாம்பாளை யம்னு பல குக்கிராமங்களில் சிறுசும் பெருசுமா சுமார் 300 தடுப்பு அணைகளைக் கட்டினோம். ஆச்சர்யப்படும் அளவுக்கு அந்தப் பகுதி விவசாயம் குபீர்னு செழிப்பு காட்டியது. அந்த வெற்றிக்குப் பிறகுதான் எங்க நிறுவனம் மேல் மக்களுக்கு சின்ன நம்பிக்கை வந்தது.

அடுத்தகட்டமா, ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்ற 10 மகளிர் சங்கங்களை ஆரம்பிச்சோம். அந்த விதைதான் இப்போ 8,300 குழுக்கள், 1 லட்சத்து 53 ஆயிரம் உறுப்பினர்கள்னு மூணு மாவட்டங்களில் விருட்சமாக வளர்ந்து இருக்கு.

பொருளாதாரத் தன்னிறைவு கிடைச்சதுமே குழந்தைத் திருமணக் கொடுமை கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சிருச்சு. கிராமத்து இல்லத்தரசிகள் பொருளா தாரத்தில் தன்னிறைவு பெற்றதுமே சுகாதாரம், பெண் சிசுக் கொலைத் தடுப்பு, குழந்தைத் திருமணத் தடுப்பு விஷயங்களில் ரொம்ப அக்கறை எடுத்துக்கிறாங்க. வறுமை காரணமா என் தாய் பட்ட கஷ்டத்தை, இன்னொரு தாய் படக் கூடாதுனு நினைச்சேன். அதை எங்கள் நிறுவனத்தின் உழைப்பால் நனவாக்கிய சந்தோஷம் போதும் எங்களுக்கு!”

 
 
 
 
மகசேசே தமிழன்!
மகசேசே தமிழன்!
Download